விரைவில் இளநரையை விரட்டுவது எப்படி?

இன்றைய நிலையில் சிறுவர்கள் முதல் பெண்கள், ஆண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமானது இளநரை. சித்தமருத்துவத்தில் இதற்கான காரணங்களும் தீர்வுகளும் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இளநரை என்பது 30 வயதுக்குள் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்கிறார் சித்த மருத்துவர் டாக்டர். சித்த மருத்துவ நிபுணர் உஷாநந்தினி BSMS., MSc Biotech.

இன்று இளநரையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கூந்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும் இளநரை என்பது அதிகரித்துதான் வருகிறது.

இளம் நரை உண்டாக காரணங்கள் என்ன?

இளம் நரை உண்டாக காரணங்களில் முதன்மையானது அதிக கவலை, மன அழுத்தம் என்று சொல்லலாம்.

அதிகமான யுவி ரேடியேஷன் படும் போது, கூந்தலுக்கு ஸ்பா சிகிச்சைகள் செய்யும் போது, சுருளான கூந்தல் சிகிச்சை, ஸ்ட்ரெய்னிங் சிகிச்சை, வெப்பக்கருவிகள் பயன்பாடு போன்றவற்றில் அதிக கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இவையும் இளநரையை உண்டாக்கிவிடுகிறது.

உடலில் சத்து குறைபாடு காரணங்களாலும் இளநரை உண்டாகிறது.

வெள்ளை முடி என்னும் நிலை என்னும் போது மெலனின் சுரப்பும் இருக்காது. மெலனோசைட்டுகள் செல்கள் அளவும் குறைவாக இருக்கும். இந்த பருவத்தில் தலைமுடி வளர்ச்சியும் பாதிக்கப்படும். இளநரையும் அதிகமாக உருவாகும்.

இளநரைக்கு சித்த மருத்துவத்தில் காரணம்

உடலில் அளவுக்கு அதிகமாக பித்தம் இருப்பதால் இந்த நரை உண்டாகிறது. அதனால் தான் இது பித்த நரை என்று சொல்லப்படுகிறது. உடலில் பித்தம் அதிகம் சுரப்பை கட்டுப்படுத்தும் உறுப்பு கல்லீரல் தான். இரத்தத்தில் பைல் என்னும் பித்த நீர் அதிகமாக சுரந்தால் இந்த நிலை உண்டாகலாம். இதற்கு காரணம் தொடர்ந்து எடுத்துகொள்ளும் சில மருந்துகள், உணவு பழக்கம். அதிக கவலை அல்லது மனச்சோர்வு போன்றவை இந்த பித்த நீர் சுரப்புக்கு காரணமாக இருக்கலாம். அப்போது கல்லீரல் பணி பாதிக்கப்பட்டு மெலனோசைட்டுகள் பணி குறைய தொடங்குகிறது.

இளநரைக்கு ஹேர் டை பயன்படுத்தலாமா?

இளநரை வந்தவுடன் ஹேர் டை பயன்படுத்துவது உண்டு. ஹேர் டை பயன்படுத்துவதற்கு முன்பு ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். ஹேர் டை தலையில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் உருவாகி ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்னும் கெமிக்கல் உருவாகி முடி இழைகளில் ஒட்டிகொள்ளும். இதுதான் இளநரை தொடர்ந்து பரவ காரணமாக இருக்கும்.

உணவின் மூலம் இரத்தத்தில் இருக்கும் பித்தம் அதிகமாகி இளநரை வரும் போது கெமிக்கல் பயன்பாடும் மூலம் அதை இயற்கையாகவோ செயற்கையாகவோ அதிகரிக்கும் போது முடியின் நிறம் முற்றிலும் மாறுபடுகிறது. இதை தவிர்க்க உடலில் இருக்கும் பித்தத்தை சரி செய்தாலே இளநரை படிப்படியாக மறையக்கூடும்.

ஹேர் டை பயன்படுத்துவதன் மூலம் இளநரை நிரந்தரமாக வெள்ளை முடியாக மாறலாம். இது கருப்பாக மாறவே மாறாது.

கூந்தலை அதிகமாக ப்ளீச் செய்வது, கெமிக்கல், ஷாம்பு, சீரம் போன்றவற்றை மாற்றி மாற்றி பயன்படுத்துவதன் மூலம் இளநரை மாறாமல் போகலாம்.

இளநரையை போக்க என்ன செய்வது?

இளநரை இருக்கும் போது பித்தத்தை சரி செய்ய உணவு முறையில் கரிசலாங்கண்ணி கீரை, கீழா நெல்லி, நெல்லிக்காய் ,கறிவேப்பிலை போன்றவற்றை சேர்க்கும் போது இரத்தத்தில் இருக்கும் பித்தத்தின் தன்மை மாறும். அப்போது ஏற்கனவே இருக்கும் முடியின் நிறத்தில் மேல்கொண்டு வளரும் போது முடியின் நிறம் கருப்பாக மாறக்கூடும். இது ஒரே நாளில் நடக்காது. படிப்படியாக மாற்றும்.

ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்யுங்கள்

வைட்டமின் பி12, வைட்டமின் பி 3, கால்சியம், காப்பர், ஜிங்க் போன்ற தாதுக்கள் எல்லாமே முடியின் நிறத்தை மாற்றும் தன்மை கொண்டவை. தோல் நோய் அலோபீசியா, ஹைப்போதைராய்டு, பொடுகு தொடர்ந்து இருப்பவர்கள், சொரியாசிஸ் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு அறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்தால் போதுமானதாக இருக்கும்.

உடலில் பித்தத்தின் மாற்றம் காரணமாக தான் இளநரை என்றால் தினசரி உணவில் கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை பொடி, நெல்லிக்காய் சாறு, கரிசலாங்கண்ணியை தேனில் குழைத்து சாப்பிடுவது போன்றவற்றை தொடர்ந்து செய்தாலே இளநரை மறைவதை உணரலாம்.