வாகனம் வாங்க இருப்பவர்களுக்கான செய்தி!

எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் எனவும் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான போலி செய்திகளை பரப்பி, வாகன விற்பனை நிலையங்களுக்குள் சூழ்ச்சிகரமான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால், நாட்டில் வாகனங்களுக்கு பாரிய கேள்வி தற்போது நிலவி வருகின்றது. அதேபோல் வாகனங்களின் விலைகள் தற்போது 100 வீதம் அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில், விரைவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சில வாகன விற்பனையாளர்கள் போலி செய்திகளை பரப்பி வருவதாக கூறப்படுகின்றது.

பதிவு செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும், வாகன விற்பனை நிலையங்களில், தற்போது வாகனங்கள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் போலி செய்திகளை பரப்பி, வாகன உரிமையாளர்களிடமிருந்து வாகனங்களை கொள்வனவு செய்து, எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிக விலைக்கு வாகனங்களை விற்பனை செய்யும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும், எதிர்வரும் மார்ச் மாதம் அல்டோ கார் ஒன்றின் விலை 40 லட்சம் ரூபா வரை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

வெகன் ஆர் ரக கார் ஒன்றின் விலை 80 லட்சம் ரூபா வரை அதிகரிக்கும் அதேவேளை, பிரியஸ் காரின் விலை ஒரு கோடி ரூபா வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.