நாட்டில் இருந்து சபரிமலை செல்பவர்களுக்கான அறிவிப்பு!

இலங்கையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் மலேரியா நோய்க்கான முற்காப்பு தடுப்பு மருந்துகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ளுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை 2016 ஆம் ஆண்டு முதல் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார அமைப்பால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் 2012 ஆம் ஆண்டு முதல் மலேரியாத் தொற்று பரவவில்லை. இருப்பினும் கடந்த ஆண்டுகளில் இந்தியா போன்ற வேறு நாடுகளில் இருந்துவரும் பயணிகளில் மலேரியாத் தொற்றுடன் பலர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மலேரியா அற்ற நாடாக எமது நாட்டை பேணுவதில் நாம் எதிர் நோக்கும் மிகப்பெரிய சவாலாகும். மலேரியா நோய் அதிகம் காணப்படுகின்ற நாடுகளுக்கு செல்பவர்கள் முற்காப்பாக தடுப்பு மருந்துகளை உரிய முறையில் உள்ளெடுப்பதன் மூலம் தமக்கு மலேரியா தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்.

இதனையடுத்து, சபரிமலை செல்ல இருக்கும் யாத்திரிகர்கள் மலேரியா நோயில் இருந்து தம்மை காத்துக்கொள்வதற்காக தமது பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்வதன் மூலம், அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ அல்லது சுகாதார கிராமம், பண்ணையில் அமைந்துள்ள பிராந்திய மலேரியா தடை இயக்க பணிமனையிலோ (தொ.பே.இல 021-2227924) தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், யாத்திரை நிறைவுற்றதில் இருந்து ஒருவருடத்திற்குள் காய்ச்சல் ஏற்படின் உங்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று தங்கள் யாத்திரை தொடர்பான விபரங்களை வைத்தியருக்கு வழங்குவதுடன் மலேரியா நோய்க்காக குருதியினை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இலங்கையை மலேரியா அற்ற நாடாக தொடர்ந்தும் பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.