வவுனியா மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான எந்தவித தட்டுப்பாடும் இல்லை….

வவுனியா மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான எந்தவித தட்டுப்பாடும் இல்லை என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் கிடைப்பனவு தொடர்பில் இன்று (13.09) கேட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

சீனி, மா என்பவற்றுக்கு ஒரு சில நாட்கள் தட்டுப்பாடு இருந்தாலும், அது குறித்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு மாவட்டத்திற்குத் தேவையான மா, சீனி என்பன கொண்டு வரப்பட்டு கூட்டுறவுச் சங்கங்கள், சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் ஏனைய தனிப்பட்ட வியாபார நிலையங்கள் ஊடாகவும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை.

இதற்கு மேலதிகமாக, தற்போது 2021, 2022 ஆண்டுக் கால போக நெற் செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளமையால் விவசாயிகள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் தடைகள் இன்றி விவசாயம் செய்வதற்காக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.