ஒலிம்பிக் துவக்க விழாவில் இந்தியா சார்பில் 6 அதிகாரிகள் மட்டுமே அனுமதி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி, நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 127 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்று இருக்கிறார்கள்.
ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது தான். மொத்தம் 18 விளையாட்டுகளில் பதக்கத்துக்காக மல்லுகட்ட காத்திருக்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், வில்வித்தை, ஆக்கி ஆகிய பந்தயங்களில் இந்தியா பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழா நாளை மாலை, டோக்கியோ நகரில் துவங்க உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 6 அதிகாரிகள் மட்டுமே இந்த துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
இது குறித்து இந்திய ஒலிம்பிக் அதிகாரி பிரேம் குமார் வெர்மா, கொரோனா எதிரொலியால், ஒலிம்பிக் போட்டிகளில் துவக்க விழாவில் இந்தியா சார்பாக  6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என்றும் இந்திய விளையாட்டு வீரர்களையும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.