பூமிக்கு வந்த ஏலியன்களின் விண்வெளிக் கப்பல்?

விண்வெளியிலிருந்து சிகார் வடிவத்திலான மிகப்பெரிய உருவம்சில ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு மிக நெருக்கத்தில் வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

உலகம் முழுவதும் விண்வெளித் துறையில் இருக்கும் பலரும் இதுகுறித்த ஆராய்ச்சியில் இறங்கினர். சரியான விபரம் தெரியாத அந்த விண்வெளிப் பொருளுக்கு Oumuamua என்று பெயரிடப்பட்டிருந்தது. ஹவாய் மொழியில் Oumuamua என்றால் இறந்த காலத்திலிருந்து வான்வழியாக வரும் தூதுவர் என்பது அர்த்தமாம்.

இந்நிலையில் அது UFO எனப்படும் விண்வெளிக் கப்பல் தான் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தார்கள் இந்த மாதிரியான நிகழ்வு இப்போது நடந்திருப்பது புதிதல்ல. இதற்கு முன்னரே இதுபோல் விண்வெளியில் மிதக்கும் வித்தியாசமான பொருட்களைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் Abraham Loeb மற்றும் Shmuel Bialy ஆகியோர் இந்த “தூதுவரைப்” பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் இது சூரிய ஒளியினால் இயங்கும் விண்வெளிக் கப்பலாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை மறுத்தும் ஆதரித்தும் பல விஞ்ஞானிகள் விவாதித்து வருகின்றனர். சூரிய ஒளியில் இருக்கும் போட்டான்களை இரண்டு மூடிய கண்ணாடிகளுக்கு இடையே எதிரொளிக்க வைப்பதன் மூலம் ஆற்றலை உருவாக்க முடியும். இதன் அடிப்படையில் தான் சூரிய ஒளிவிண்கலம் இயங்குகிறது. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி பூமிக்கு வந்த விண்கலம் சூரிய ஒளியினைக் கொண்டு இயங்கும் கலமாக இருக்கும் பட்சத்தில் இது மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறும்.

ஏனெனில் சூரிய ஒளியினால் இயங்கும் விண்கலங்கள் அதிநுட்ப அறிவியல் சாதனையாகும். அப்படியானால் தொலைத்தொடர்பு மற்றும் விண்வெளித்துறையில் முன்னேறிய ஓர் ஏலியன் இனம் இருப்பது உறுதியாகும். ஆனால் பல விண்வெளிசார் ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவினை மறுதலிக்கின்றனர்.

இதுவரை அந்த விண்கலம் குறித்த நம்பத்தகுந்த தரவுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை இதனால் இந்த முடிவு அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாத கூற்று என்கிறார்கள். இறந்த காலத்தை கவனித்தால் இவை ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றவைதான். அதனால் இந்த மர்மத்தினை விலக்கும் அடுத்த வாய்ப்பு கிடைக்கும் வரை ஆராய்ச்சியாளர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.