நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் – ரணில்…!!

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே, பொருளாதார ரீதியில் நாட்டை மீள வழமைக்கு கொண்டு வருவதற்கான ஒரேயொரு வழிமுறை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டதை அடுத்து, சபையில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தேசிய கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. கொரோனா தடுப்புக்கான செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரவையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம், செயற்படுவது அவசியம். நாடு தற்போது இராணுவ மயமாக்கலை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. அது பாரிய தவறான விடயம்.

நாட்டின் பிரதான மூன்று கட்டமைப்புக்கள் காணப்படுகின்றது. இதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசியல் அதிகாரம், அமைச்சரவை செயலாளர்கள் உள்ளிட்ட சிவில் அதிகாரம் மற்றும் இராணுவ அதிகாரம் என்பனவே அவையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் நிபுணர்களைக் கொண்டே கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கையில் மட்டுமே இராணுவத் தளபதியிடம் இந்த நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களுடனான கூட்டத்திலும் இராணுவத் தளபதி வந்து அமர்ந்து கொள்வதாகவும் அவ்வாறான கூட்டங்களில் நிதி அமைச்சர் இராஜாங்க அமைச்சர் பங்கேற்பது நியாயம் என்ற போதிலும் இராணுவத் தளபதிக்கு அங்கு வேலையில்லை.

இவ்வாறான கூட்டங்களில் இராணுவத் தளபதி வந்து அமர்ந்து கொண்டால் வரும் முதலீட்டாளர்களும் ஓடி விடுவார்கள்.

நாட்டை இராணுவ மயமாக்கல் நோக்கி நகர்த்துவதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமைச்சரவை, நாடாளுமன்றம் தீர்மானங்களை எடுக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துளளார்.