நாய்கள் காப்பகங்கள் பற்றி வெளியான பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

யாழில் உள்ள நாய்கள் காப்பகங்கள் பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் தியாகி அறக்கட்டளையினால் நடத்தப்படும் நாய்கள் காப்பகத்தில், நாய்களிற்கு நடக்கும் கொடுமைகளை அம்பலப்படுத்திய சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், இயக்கச்சியிலுள்ள மற்றொரு காப்பகம் பற்றிய அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.

இயக்கச்சியிலுள்ள நாய்கள் காப்பகத்திலிருந்து நாய்கள் வெளியேறி மக்கள் குடியிருப்புக்களிற்குள் சென்றதால், ஏராளமான நாய்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர் முகநூலில் வெளியிட்ட பதிவு ஒன்றில்,

யாழ் மாநகர பிதா சட்டத்தரணி மணிவண்ணன் அவர்கள் யாழ் நகரிலுள்ள கட்டாக்காலி நாய்கள்பற்றி கருத்துத் தெரிவிக்கையில்,

குடாநாட்டில் இரண்டு நாய்கள் காப்பகங்கள் இருக்கின்றதெனவும் அவைகள்பற்றி பிரச்சினைகள் இருக்கின்றன என ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை அக்காப்பகங்கள் நாய்களால் நிரம்பி வழிகின்றன எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். இதில் எந்தவித உண்மையுமில்லை.

கௌரவ முதல்வர் தனது தரவுகளைச் சரிபாரத்துக் கொள்ளவேண்டும். இயக்கச்சியிலுள்ள ஆறுதிருமுருகனுடைய நாய்கள் காப்பகத்திலிருந்த நாய்கள் ஆறுதிருமுருகனுக்கே தெரிந்த காரணங்களுக்காக காப்பகத்தைவிட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து கிராம மக்களால் சுடுதண்ணீர் ஊற்றி கொல்லப்பட்டுள்ளன.

அந்தக் காப்பகத்திலிருந்த 268 நாய்களுள் அண்மைக்காலத்தில் உயிருடனிருந்தவை 6 நாய்கள் மட்டுமே.

யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள தியாகி அறக்கொடையினரின் நாய்கள் காப்பகம்பற்றிச் சொல்லத் தேவையில்லை. அது நாய்களை கொலை செய்யும் ஒரு நிலையம்.

கட்டாக்காலி நாய்கள் என்று நீங்கள் சொல்வது எவற்றை என்பதை மாநகர முதல்வர் தெரிவிக்க வேண்டும். தெரு நாய்களில் கைவைக்கவேண்டாமென நான் உங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே விடுகிறேன். இவ்வாறு பதவிட்டுள்ளார்.

தியாகி அறக்கொடையினரின் நாய்கள் காப்பகத்தில் நாய்கள் உணவில்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் காணொளி காட்சிகளை ஏற்கனவே சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன் வெளியிட்டதுடன், பட்டினியால் இறந்த நாய்களை மற்ற நாய்கள் உணவாக உட்கொண்டதை காணொளியாக பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.