கனடாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தங்களின் மரபை மீறி சிக்கிய மருத்துவர்கள் தாடியை எடுத்துள்ளது, உலக அளவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கனடா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு, தேவையான உதவிகளை உரிய அரசு செய்து வருவதாக, கூறப்படுவதால், பெரும் பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த சில சீக்கிய மருத்துவர்கள் தங்கள் வழக்கத்திற்க்கு மாறாகத் தாடியை எடுத்துள்ளனர்.அவர்கள், தங்கள் நம்பிக்கைக்கும் மனிதநேயத்துக்கும் இடையிலான போராட்டத்தில் அவர்கள் மனிதநேயத்துக்கு முன்னுரிமை வழங்கி தங்கள் தாடியை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சீக்கிய மதத்தில் தலைப்பாகை அணிவது, உடை, வெண்கலக் கையணி போன்றவையுடன் இயற்கையாக வளரும் முடியை வெட்டக்கூடாது என்பதும் ஒரு மரபு. ஆனால் கனட சீக்கிய மருத்துவர்கள், தங்களுக்கு இருக்கும் தாடியால் கொரோனா போரில் முன்னால் நின்று வேலை செய்ய முடியவில்லை என்பதற்காக இதைச் செய்துள்ளனர்.
மெக்கில் பல்கலைக்கழக சுகாதார மையத்தின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவரான சஞ்சீத் சிங் மற்றும் அவரது சகோதரரும் அதே மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராகப் பணி புரியும் ராஜீத் சிங்கும் இது குறித்து கூறுகையில், இது ஒரு கடினமான முடிவு தான், இருப்பினும் இந்த நேரத்தில் இது தேவையான ஒன்றாக நாங்கள் கருதுகிறோம்.
எங்களுக்கு இருக்கும் தாடியால், முகமூடி கொண்டு முழுவதும் முகத்தை மூடமுடியவில்லை. அதனால் கொரோனா நோயாளிகளுக்கு அருகில் சென்று சிகிச்சையளிக்க முடியாமல் ஒதுக்கப்பட்டோம். எங்கள் மதத்தில் சேவை செய்வது மிகவும் பெரிதாகக் கருதப்படும். எனவே இந்த நேரத்தில் சேவையைத் தேர்ந்தெடுத்து, தாடியை எடுத்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இவர்களின் இந்த முடிவிற்கு உலக அளவில் பலரும் பராட்டி வருகின்றனர். கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4,200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.