கொரோனாவால் அம்பானிக்கு ஏற்பட்ட நஷ்டம் : அரை நாளில் ரூ.40,000 கோடியை இழந்த அம்பானி

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், இன்று மதிய நிலவரப்படி ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 40,000 கோடி ரூபாய் வரை சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி தீவிரமடைந்து வரும் சூழலில் கச்சா எண்ணெய் விலையும் இன்று சர்வதேசச் சந்தையில் 30% சரிந்தது.

இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்று ஒரே நாளில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இன்று மட்டும் நிப்டி மதிப்பு 6.08 சதவீதம் குறைந்தது.

மேலும் நிப்டி பங்கு ஒன்றின் விலை 10,294 வரை சரிந்தது. இதுவே கடந்த 17 மாதங்களில் நிப்டியின் குறைந்தபட்ச மதிப்பாகும்.

அதேபோல மும்பை பங்குச்சந்தையும் இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இன்று மட்டும் மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு சுமார் 6.08 சதவீதம் வரை குறைந்தது.

இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. ஒரு பங்கின் மதிப்பு 1,095 வரை குறைந்தது.

இதுவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன வரலாற்றில் கடந்த 11 ஆண்டுகளில் மிகக்குறைந்த பங்கு மதிப்பு ஆகும். இதன் காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இன்று மதிய நிலவரப்படி சுமார் 40,000 கோடி வரை சரிந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

41.8 பில்லியின் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு இன்று பிற்பகல் நிலவரப்படி 12.40% குறைந்தது. கரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள இந்த தாக்கத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் தற்போது சிக்கியுள்ளது.