ஈரானிய ஏவுகணைகளால் விமானம் தவறாக சுட்டுவீழ்த்தப்பட்டது: ஜஸ்டின் ட்ரூடோ!

ஈரானிய ஏவுகணை தாக்குதலிலேயே உக்ரேனிய விமானம் வீழ்த்தப்பட்டதாக சான்றுகள் சுட்டிக்காட்டுவதாகவும், இந்த தாக்குதல் “தற்செயலாக நடந்திருக்கலாம்” என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை இதனை தெரிவித்தார்.

கனேடிய உளவுத்துறை அந்த தகவலை உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார்.

“எங்கள் கூட்டாளிகள் மற்றும் எங்கள் சொந்த உளவுத்துறை உட்பட பல ஆதாரங்களில் இருந்து இந்த தகவலை உறுதி செய்தோம். ஈரானிய மேற்பரப்பில் இருந்து வான்வழி ஏவுகணையால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதற்கான சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது தற்செயலாக நடந்திருக்கலாம்.”என ஒட்டவாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

முன்னதாக, ஈரானிய விமான எதிர்ப்பு ஏவுகணை விமானத்தை வீழ்த்தியது, விமானத்தில் இருந்த 176 பேரும் கொல்லப்பட்டிருக்க “அதிக வாய்ப்பு” என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அது தொழில்நுட்ப பிழையாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் “ஈரானிய மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணையால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. இது தற்செயலாக நடந்திருக்கலாம்” என்று  கூறினார்.

எனினும், ஈரான் அந்த அறிக்கைகளை “நியாயமற்ற வதந்திகள்” என்று நிராகரித்தது.

“உக்ரேனிய விமானத்தை ஒரு ஏவுகணை தாக்கியது என்பது சாத்தியமில்லாதது” என்று ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்துத் தலைவர் கூறியதை ஈரானின் ஐஎன்எஸ்ஏ செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கெய்வ் நகருக்கு புறப்பட்ட உக்ரைன் இன்டர்நஷனல் ஏர்லைன்ஸ் விமானம் தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை புறப்பட்ட சில நிமிடங்களில்  விபத்துக்குள்ளானது. விமானத்தில் 63 கனடியர்கள் இருந்தனர்.

ஈரானிய புலனாய்வாளர்கள் வியாழக்கிழமை ஒரு ஆரம்ப அறிக்கையை வெளியிட்டனர், விமானம் தீப்பிடித்தது மற்றும் திரும்பிச் செல்ல முயன்றது, ஆனால் அதன் குழுவினர் ஒருபோதும் உதவிக்காக வானொலி அழைப்பு விடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டது. அந்த அறிக்கை சம்பவத்தை ஒரு விபத்து என்று வகைப்படுத்தியது. விமான பேரழிவுகள் குறித்த ஆழமான விசாரணைகள் முடிய பொதுவாக பல மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.