ஈரான்- அமெரிக்க போர்ப் பதற்றத்திற்கிடையில் உக்ரேனிய விமானத்தை ஏவுகணை தாக்கும் காணொளி வெளியானது (VIDEO)

ஈரான்- அமெரிக்க போர்ப் பதற்றத்திற்கிடையில் கடந்த புதன்கிழமை தெஹ்ரானில் வீழ்ந்து நொறுங்கிய உக்ரேனிய விமானத்தை ஏவுகணை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

ஈராக்கிலுள்ள அமெரிக்கா இராணுவத்தளங்களின் மீது ஈரான் கடந்த புதன் கிழமை தாக்குதல் நடத்தியது. இது நடந்து சிறிது நேரத்தின் பின்னர் தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் உக்ரேனின் தலைநகர் கெய்விற்கு புறப்பட்ட உக்ரேனிய சர்வதேச விமானம் விபத்துக்குள்ளானது.

நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சி.என்.என் ஆகியன வெளியிட்ட இந்த வீடியோ, கனேடிய, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அதிகாரிகளின் அறிக்கைகளுடன் ஒத்துப்போகிறது. மேற்படி நாடுகள், ஈரானிய ஏவுகணை விமானத்தை வீழ்த்தியதாக குறிப்பிட்டிருந்தன. எனினும், ஈரான் அதனை நிராகரித்திருந்தது.

அது வான் பாதுகாப்பு கட்டமைப்பின் தவறு காரணமாக நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரேனிய விமானம் முதன்முதலில் அதன் சமிக்ஞையை அனுப்புவதை நிறுத்திய புறநகர்ப் பகுதியான பராண்டின் மீது வானத்தில் ஒரு சிறிய வெடிப்பு வீடியோவில் பதிவாகியுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விமான நிலையத்தை நோக்கி திரும்புவதற்கு முன்பு விமானம் பல நிமிடங்கள் தொடர்ந்து பறக்கிறது என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது. பின்னர் அது வெடித்து நொறுங்கியது. உரத்த வெடிப்பைக் கேட்கலாம்.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் குடிமக்கள் பத்திரிகையாளர்களின் சுயாதீனமான சர்வதேச கூட்டு நிறுவனமான பெல்லிங்கட், புவிஅமைவிட தொழில்நுட்பம் மற்றும் பிற நுட்பங்களைப் பயன்படுத்தி வீடியோவை உறுதிசெய்ததாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சி.என்.என் ஆகியவை பத்திரிகையாளர் நாரிமன் கரிப் அந்த வீடியோவை அனுப்பியதாகக் கூறின. அவர் அதை வேறொரு நபரிடமிருந்து பெற்றதாகக் கூறினார். அந்த நபர் ஏன் அந்த நேரத்தில் பதிவு செய்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எனினும், ஏவுகணை விமானத்தை தாக்கியதை ஈரான் மறுத்துள்ளது.

“இந்த அறிக்கைகள் அனைத்தும் ஈரானுக்கு எதிரான ஒரு உளவியல் யுத்தம். விமானத்தில் குடிமக்கள் இருந்த அனைத்து நாடுகளும் பிரதிநிதிகளை அனுப்ப முடியும், மேலும் கருப்பு பெட்டியை விசாரிக்கும் பணியில் சேர போயிங்கை அதன் பிரதிநிதியை அனுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி மேற்கோளிட்டுள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், விபத்து குறித்து உளவுத்துறை தகவலை பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வியாழக்கிழமை “நம்பகமான மற்றும் முழுமையான விசாரணையின்” அவசியத்தை வலியுறுத்தினார், மேலும் கனேடிய மற்றும் சர்வதேச புலனாய்வாளர்களுக்கு விபத்து நடந்த இடத்திற்கு ஈரான் அனுமதி வழங்குமாறு அழைப்பு விடுத்தார். விமானத்தில் 63 கனடியர்கள் இருந்தனர்.

விமான விபத்தை ஆராய உக்ரேனிய புலனாய்வாளர்கள் நேற்று வியாழக்கிழமை ஈரான் சென்றடைந்துள்ளனர்.