சமகாலத்தில் அபிவிருத்தியுடன் எமது உரிமைகளுக்காகவும் போராட வேண்டும்: க.கோடீஸ்வரன்

சமகாலத்தில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை எமது உரிமைகளையிட்டும் போராட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காரைதீவு, விளையாட்டுக் கழகத்தினதும் விபுலாநந்த சனசமுக நிலையத்தினதும் வருடாந்த ஒன்றுகூடல் விழா அண்மையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தமிழையும், தமிழ்த் தேசியத்தையும் நேசிக்கின்ற பழம்பெரும் மண் காரைதீவு மண். இது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் தாயகம். அனைவருக்கும் சகல விடயங்களிலும் முன்னோடியான இம்மண்ணை நேசிக்கிறேன்.

நாம் அபிவிருத்தியை மட்டும் கருத்திற்கொண்டால் தமிழன் என்ற அடையாளத்தை இழக்கவேண்டிவரும். அதற்காக அபிவிருத்தி வேண்டாம் என்ற கருத்தில்லை.

சமகாலத்தில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை எமது உரிமைகளையிட்டும் போராட வேண்டும்.

தமிழர்கள் பல அணிகளில் பிரிந்து நின்றால் இழக்கப்படக்கூடிய சாத்தியமுண்டு. அப்படியெனின், எமது எதிர்காலம் சூனியமாகிவிடும்.

இருப்பு கேள்விக்குறியாகும். எனவே, எமது பிரதிநிதித்துவத்தை ஒருபோதும் இழக்கக் கூடாதவகையில் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

இவ்விளையாட்டுக்கழகம் விளையாட்டில் மட்டுமல்ல. கல்வி, கலாசாரம், பாரம்பரியம் போன்ற இன்னோரன்ன துறைகளில் தடம்பதித்து வருவதை நானறிவேன்.

உங்களது உள்ளக விளையாட்டரங்கு நிறைவுறும் வகையில், என்னாலான பணிகளை முழு மனதுடன் செயற்படுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், கல்முனை ஆதார வைத்தியசாலை பிரதி வைத்திய அத்தியட்சகர் சா.இராஜேந்திரன், வைத்திய அதிகாரி டாக்டர் பி.சுரேஸ்குமார் தர்மகர்த்தா, இ.திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.