திருகோணமலை- மூதூர்பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று (30) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கிளிவெட்டி, 58, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த பாகரன் கிஜோதன் (18 வயது) எனவும் தெரியவருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில் இளைஞனை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் ஈடுபட்டிருந்த வேளை அவரது வீட்டுக்கு வருகை தந்திருந்த அவரது மாமா தற்செயலாக வீட்டுக்கு முன்னால் உள்ள கிணற்றை பார்வையிட்டபோது கிணற்றுக்குள் சடலம் தென்பட்டதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அவரது சடலத்தை உறவினர்கள் கிணற்றுக்குள் கிடப்பதை அவதானித்து இருந்த நிலையில் மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அவ்விடத்துக்கு விஜயம் மேற்கொண்ட மூதூர் பொலிஸார் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஏ ஜே. எம். நூறுல்லாஹ் முன்னிலையில் சடலத்தை மீட்டனர்.

இந்நிலையில் கிணற்றுக்குள் விழுந்து மரணித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே.எம் நூறுல்லாஹ் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை சடலம் தற்பொழுது மூதூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சட்ட வைத்திய நிபுணரின் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.