உலகத்தை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டியவை.!

குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதை சொல்லித்தர வேண்டும்.

குழந்தைகளிடம் சொல்ல வேண்டியவை :

நமது அனுபவங்களை குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்து அவர்களை நல்வழியில் வழிநடத்துவது அவசியம். அதற்காக குழந்தைகளுக்கு எதிர்மறையான எண்ணங்களை திணிக்கக்கூடாது.

நமக்கு இருக்கும் தோற்றம், நிறம், அழகு, செயல், அறிவு, குடும்பம், வாழ்க்கை என அனைத்தையும் நாம் நேசிக்க வேண்டியது அவசியம்.

தன்னைப்பற்றி இழிவாக எண்ணக்கூடாது என்று குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

உங்கள் குழந்தைகளை இந்த உலகின் பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்க்க வைக்க வேண்டும். பயணங்களை ஊக்குவிப்பதன் மூலம் அறிவு அதிகரிக்கும்.

நல்ல நண்பர்கள் இருந்தால்தான் நாமும் நன்றாக இருக்க முடியும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்கும். அதை நோக்கி பயணிப்பதே நமது கடமை. இதனை குழந்தைகளுக்கு தகுந்த வயதில் சொல்லித்தர வேண்டும்.

குழந்தைகளிடம் இப்படி இருக்க வேண்டும் என்று உங்கள் விருப்பத்தை திணிக்கக்கூடாது.

பள்ளி செல்லும் குழந்தைகளிடம், ‘இன்று நாள் எப்படி இருந்தது?” என்று அவர்களிடம் அன்பாக கேட்டு, அவர்களின் படிப்பு மற்றும் நட்பு வட்டாரம் குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.

உங்கள் குழந்தை தோல்வியை கண்டு பயமோ அல்லது சோர்வோ அடைந்தால், கை விடாதே… முயற்சி செய்… என்று நம்பிக்கை கொடுங்கள்.

அறிமுகம் இல்லாத நபர்கள் சாக்லேட், பிஸ்கெட் கொடுத்தாலும் வாங்கி சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

உணவு, பொம்மை போன்றவற்றை பெற்றோர் அல்லது உறவினரை தவிர யாரிடமும் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

தீயின் பாதிப்புகள் குறித்து குழந்தைகளுக்கு கற்று கொடுக்கவும், ஏன் அவற்றின் அருகில் செல்லக்கூடாது? என்பதை பற்றியும் விளக்க வேண்டும்.

குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் மறைக்கக்கூடாது. குறிப்பாக பெற்றோரிடம் மறைக்க சொல்லி உறவினர்கள், அண்டைவீட்டார்கள் மற்றும் நண்பர்கள் கூறினாலும் அவற்றை பெற்றோரிடம் தெரியப்படுத்த சொல்லி கொடுக்க வேண்டும்.

பெற்றோரை தவிர வேறு யாரும் குழந்தையின் அந்தரங்க பகுதிகளை தொட்டால், அவர்கள் பெற்றோரிடம் சொல்லக்கூடாது என மிரட்டினாலும், என்ன பொருட்களை வாங்கி கொடுத்தாலும் மறைக்காமல் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என அவர்களுக்கு ஆரம்பத்திலேயே தெரியப்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு வீட்டில் உள்ளவர்களின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை சொல்லி தர வேண்டியது அவசியம்.

குழந்தைகள் எப்போதும் பெற்றோர் கண்காணிப்பில் இருப்பதுதான் பாதுகாப்பு என்று சொல்லித்தர வேண்டும்.