ரஜினி என்ற மிகப்பெரிய கப்பலில் பயணம் செய்தது பெருமை – முருகதாஸ்

ரஜினி என்பவர் ஒரு மிகப்பெரிய கப்பல் எனவும் அந்தக் கப்பலில் தானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது எனவும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது.

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனின் தயாரிப்பிலான ‘தர்பார்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய விழாவில் முருகதாஸ் உரையாற்றுகையில், “சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த்திடம் நான் நிறைய விடயங்கள் கற்றுக் கொண்டுள்ளேன். அவரிடம் ஆன்மீகம், அரசியல் உட்பட பல விடயங்கள் பேசி இருக்கின்றேன்.

அதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவெனில், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் நிஜ வாழ்க்கையில் நல்லவர்களாக நிச்சயம் இருப்பார்கள். ஏனெனில் நம்மை ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்தான் அவர்களை நல்லவர்களாக மாற்றுகிறது.

மேலும் ஒரு மனிதன் மிகச் சிறந்த மனிதன் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால் ஒரு மனிதன் தன்னைவிட கீழே உள்ளவர்களுக்கு மரியாதை கொடுப்பதை வைத்து தான். அந்த வகையில் ரஜினிகாந்த்திடம் இந்த குணத்தை நான் நேரில் பார்த்தேன்.

மேக்கப் போடுபவர்கள் முதல் துணை நடிகர்கள் வரை அவருடன் சிரித்து விளையாடுவார்கள். அவருடைய மனிதாபிமானத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

பல நடிகர்கள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களின் முகத்தைக் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்கள். ஆனால் ரஜினிகாந்த், ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி அழைத்து அவர்களுடன் உரையாடுவார். அதுதான் அவரது வெற்றிக்குக் காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

ரஜினிகாந்த் அற்புதம், அதிசயம் பற்றி ஏற்கனவே பேசினார். ஆனால் அவரே ஒரு அற்புதம் தான். ரஜினியே ஒரு அற்புத மனிதர். ரஜினி என்பவர் ஒரு மிகப்பெரிய கப்பல். அந்த கப்பலில் நானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளேன் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

அவரை வாழ்த்துவதற்கும் பாராட்டுவதற்கும் எனக்கு வயது போதாது. ஆனால் ஒன்று என்னால் செய்ய முடியும். ரஜினி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் நல்ல மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வேன். அதற்கு எங்களுக்கு உரிமை இருக்கின்றது” என்று கூறிவிட்டு தனது உரையை முடித்தார் இயக்குநர் முருகதாஸ்.