நீரிழிவு நோயாளிகளே… தயவு செய்து இந்த காய்கறிகளின் பக்கம் தலை வைத்து கூட படுக்காதீர்கள்!

நீரிழிவைக் குணப்படுத்த முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், கட்டுப்படுத்த முடியாது என்று கூற முடியாது.

நீரிழிவை அதிகரிக்க செய்யும் மோசமான உணவுகளை ஒதுக்கினாலே போதும் நீரிழிவு கட்டுக்குள் வரும்.

இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு இருக்கு என்று கூறுபவர்களை விட எனக்கு நீரிழிவு இல்லை என்று சொல்பவர்களைத்தான் ஆச்சரியமாக பார்க்கிறோம்.

நீரிழிவைக் கட்டுக்குள் கொண்டு வர விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த வகை உணவுகளை தொடவே கூடாது.

இறைச்சி

நான் சுத்தமான அசைவன் என்று பீற்றிக்கொள்வதெல்லாம் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் மட்டுமே இருக்க வேண்டும்.

நீரிழிவு பாதிப்புக்கு உள்ளான பிறகு அதிலும் கட்டுக்குள் இருக்கும் போதுதான் அசைவ உணவு பக்கம் திரும்ப வேண்டும். அதிலும் கட்டுப்பாடு உண்டு.

கடல் உணவுகளில் மீன் எடுத்துகொள்ளலாம். அதிலும் எண்ணெயில் பொரித்தெடுக்காத குழம்பு மீன் உடலுக்கு நல்லது. நாட்டுக்கோழியும் அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் ஆட்டு இறைச்சி மாட்டு இறைச்சி, பிராய்லர் கோழி, இறைச்சி ஈரல், மூளை போன்றவையெல்லாமே உங்களுக்கு ஆகாத உணவு வகைதான். தினமும் முட்டை சாப்பிடலாமா என்றால் அதிலும் மஞ்சள் கரு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்பது தான் சரியாக இருக்கும்.

நொறுக்குத்தீனி

எண்ணெயில் பொறித்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், சிப்ஸ், பப்ஸ், பீட்ஸா, டோனட்ஸ் போன்ற மைதா உணவுகள் நீரிழிவை அதிகரிக்க செய்யும். எக்காலத்திலும் கட்டுப்படுத்தாது.

பதப்படுத்தலுக்காக இதில் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரிப்பதால் இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளை உண்டாக்கிவிடும். அதனால் தான் நீரிழிவு கட்டுப்படுத்த முடியாத போது சிறுநீரகப் பிரச்சனை களும் எளிதாக உண்டாகிறது.

பரோட்டா

உடலின் ஒட்டு மொத்த பிரச்சினைக்கும் காரணமாக மைதாவை சொல்லலாம். மைதாவை வெள்ளையாக்க சேர்க்கப்படும் அதிகப்படியான கெமிக்கல் உடல் பருமன் முதல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளைத்தடுப்பது வரை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது.

அதிகப்படியான எண்ணெய் மைதா சேர்த்து தயாரிக்கப்படும் பரோட்டாவை எப்போதும் தொடாதீர்கள்.

காய்கறிகளில் இது வேண்டாம்

கேரட், பீட்ரூட் இனிப்பான பிடித்தமான காய்கறிகளில் முதலிடத்தில் இருக்கிறது. கண்ணுக்கு நல்லது என்று சொல்லும் கேரட்டும், இரத்த உற்பத்திக்கு நல்லது என்று சாப்பிடும் பீட்ரூட்டும் நீரிழிவுக்காரர்களுக்கு ஆகச்சிறந்த காய்கறி அல்ல.

மாதம் ஒரு முறை அதுவும் நீரிழிவு கட்டுக்குள் இருபப்வர்கள் மட்டும் ஆசைக்கு ஒரு வாய் என்று ஒரு விள்ளல் போட்டுக் கொள்ளலாமே தவிர ஒரு காலத்திலும் இதை அள்ளி சாப்பிடக்கூடாது. குறிப்பாக என்ன செய்தும் நீரிழிவு கட்டுக்குள் இல்லை என்று புலம்புபவர்கள் இதன் பக்கமே போகக்கூடாது.

தவிர்க்க வேண்டிய கிழங்குகள்

மொறு மொறுவென்று எல்லா குழம்புக்கும் தொட்டுகொள்ளலாம் என்று சப்பு கொட்டி சாப்பிட வைக்கும் எந்த கிழங்கின் பக்கமும் தலை வைத்து படுக்காதீர்கள்.

இவை எல்லாமே உங்களை தீவிர நீரிழிவு நோயாளிகளாக்கி வேடிக்கை பார்க்க கூடியவை.

குறிப்பாக உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு இவையெல்லாமே எப்போதுமே உங்களுக்கு எதிரிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எண்ணெயில் பொரித்தால் தானே பிரச்சனை ஆவியில் வேக வைத்து சாப்பிடலாமா என்ற இரண்டாம் கட்ட கேள்விக்கும் அதற்கு இடமில்லை.