பிரித்தானியாவில் பொதுமக்களால் கொண்டாடப்படும் இரு பொலிசார்! காரணம் என்ன?

பிரித்தானியாவில் வணிக வளாகம் ஒன்றில் வாளுடன் திடீரென்று பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை இரு பொலிசார் ஆயுதங்கள் இன்றி எதிர்கொள்ள முயற்சித்த சம்பவம் பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது.

வாளுடன் மாயமான நபரை அந்த பொலிசார் இருவரும் துரத்திப் பிடித்துள்ளனர். இதனிடையே இவர்கள் இருவரும் உதவிக்கு அழைத்ததன் பேரில் துரிதமாக செயல்பட்ட ஆயுதம் ஏந்திய பொலிசார் சுமார் 5 நிமிடங்களுக்குள் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

பயங்கரவாதம் தொடர்பான தாக்குதலை முன்னெடுத்ததாக கூறி கைது செய்ததாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி பகல் 11.15 மணியளவில் Manchester Arndale வணிக வளாகத்தில் மர்ம நபர் வாளுடன் தாக்குதலில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரை கைது செய்ததுடன், வாள்வெட்டில் காயமடைந்தவர்களில் நால்வரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒருவருக்கு சம்பவயிடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

திடீரென்று Arndale Centre வணிக வளாகத்தில் புகுந்து கண்மூடித்தனமாக வாள்வெட்டில் ஈடுபட்ட நபரால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து நாலாபக்கமும் சிதறி ஓடியுள்ளனர்.

குறித்த நபர் தாக்குதலில் ஈடுபட காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என கூறும் பொலிசார்,

இந்த தாக்குதலானது மிகவும் கொடூரமானது மட்டுமல்ல, பார்வையாளர்களை கண்டிப்பாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழே அவரை கைது செய்துள்ளதாக கூறும் பொலிசார், அவரது நடவடிக்கை கண்டிப்பாக பயங்கரவாத செயல் போலவே இருந்துள்ளது என்றனர்.