மாமல்லபுரம்: கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கண்டு களித்தனர்.

கடற்கரை கோவில் அருகே கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அங்கு குண்டு துளைக்காத வகையில் 2 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு அரங்கத்தில் பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் அமர்ந்து பேசியவாறே அருகில் உள்ள மற்றொரு அரங்கத்தில் நடைபெறும் கலாஷேத்ரா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியையும், நாடகத்தையும் கண்டு களித்தனர்.

முன்னதாக இரு தலைவர்களும் நடந்தபடி பேசியவாறே அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள அற்புதமான சிற்பங்கள், கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள் முன் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து இரு தலைவர்களும் ஐந்து ரதத்தை பார்வையிட்டனர். ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து பேசியவாறு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இளநீர் பருகினர்.

பாரமபரிய கலைகளான தமிழகத்தின் பரதநாட்டியம், கேரளாவின் கதகளி குறித்த அறிமுக உரை சீன மொழியில் மொழிபெயர்த்து வழங்கப்பட்டது. கலாஷேத்ரா குழுவினரின் பரதநாட்டியம் முதலிலும் பின்னர் கதகளியும் அரங்கேற்றப்பட்டது. பிரதமர் மோடி கலைநிகழ்ச்சியை ரசித்துப் பார்த்தார்.

தொடர்ந்து, ராமாயண காட்சிகளை கலைஞர்கள் அரங்கேற்றினர். வாலி வதை படலம், ராமர் சேது பாலம் அமைக்கும் காட்சிகளை நடன கலைஞர்கள் நடித்து காட்ட, இருநாட்டு தலைவர்களும் ரசித்து பார்த்தனர். நடனம் குறித்தும், ராமாயண காட்சிகள் குறித்தும் சீன அதிபருக்கு பிரதமர் மோடி அவ்வப்போது விளக்கி கூறினார். கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் இரு நாட்டு தலைவர்களும் நாட்டிய கலைஞர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.