மனித கல்லீரலை பாதுகாப்பாக வைத்து கொள்வது எப்படி?

நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.

மேலும், கல்லீரலை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ள என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

உடல் எடை

எல்லா நோய்களுக்கும் தொடக்க புள்ளி உடல் பருமன். உடல் பருமன் அதிகரித்திருந்தால் கல்லீரல் பிரச்னைகள் வரலாம். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

மது

மது அருந்துவதால் கல்லீரல் பெருமளவில் பாதிக்கப்படும். மதுவை முழுவதுமாக நிறுத்த முடியாவிட்டால், குறைவாக எடுத்து கொள்ளலாம். ஆனால் எப்படியானாலும் மது அருந்துவதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கும்.

உடற்பயிற்சி

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் உடல் உபாதைகள் தடுக்கப்படுகிறது. மேலும் கல்லீரலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் குறைக்கப்படுகிறது. தினமும் நடைப்பயிற்சி அல்லது வேறு பயிற்சிகள் செய்யலாம்.

உணவு

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும். காபி, தேநீர், கொழுப்பு நிறைந்த மீன்கள், ஆலிவ் எண்ணெய், நட்ஸ், காய்கறிகள், திராட்சை மற்றும் பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். இவை கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

மருந்துகள்

நாம் சாப்பிடக்கூடிய மருந்துகள் கூட கல்லீரலை பாதிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும். தொடர்ச்சியாக மருந்துகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்னை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

நெல்லிக்காய்

வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.

அதிமதுரம்

சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம். இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை குடிப்பது உசிதம்.

மஞ்சள்

தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பலப்பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.

பப்பாளிப் பழம்

கல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒரு அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது பலன் கொடுக்கும்.