இயற்கையான முறையில் பேஷியல் செய்வது எப்படி?!

இயற்கை முறையிலேயே முகத்தை பொலிவுடன் வைத்து கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம். இது நிச்சயமாக உங்களுக்கு பலனை தரும். மேலும், தேவையற்ற பார்லர் செலவுகளை குறைக்கும்.

ஒரு ஸ்பூன் பால் பவுடருடன், சிறிதளவு எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் மஸாஜ் செய்யலாம். இது, முகத்தை பளிச் என மாற்றும். வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கும்.

கிளிசரினுக்குப் பதிலாகப் தயிர் உபயோகித்து மசாஜ் செய்யலாம். இது சருமத்துக்கு ஊட்டத்தையும் குளிர்ச்சியையும் ஏற்படுத்தி, முகப்பொலிவை அதிகப்படுத்தும்.

வொய்ட் மார்க்ஸ், பிளாக் மார்க்ஸ் போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே வாரம் இருமுறை சூடான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஆவி பிடிக்கலாம். இது, முகத்தில் தூசியினால் ஏற்படும் அழுக்கையும் கிருமியையும் அகற்றி, புதிய செல்களை உருவாக்கும்,புத்துணர்வை அளிக்கும்.

ரவையைத் தயிரில் ஊறவைத்து, வாரம் ஒருமுறை ஸ்க்ரப்பிங் செய்யலாம். இது, முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இளமையுடன் இருக்கவும், முக அழகை அதிகரிக்கவும் செய்கிறது.

முகப்பருக்களால் ஏற்படும் குழியைச் சரிசெய்ய, கடலைமாவுடன் தண்ணீர் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக்காகப் போட்டு முகம் கழுவலாம். சென்ஸிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், எலுமிச்சை சாறை உபயோகிக்க கூடாது அது எரிச்சலை உண்டாக்கும். அதற்குப் பதிலாக, ஐஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, கோரைக்கிழங்கும் மஞ்சளும் சேர்த்து, முடிக்கு எதிர்ப்பக்கமாக தேய்க்கவும். நாளடைவில் தானாகவே முடிகள் உதிர்ந்துவிடும்.

மிகவும் வறண்ட சருமம் உடையவர்கள், அதிமதுரமும் பாலும் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக் போட்டு முகம் கழுவுங்கள். சருமம் மென்மை பெறுவதுடன், பருக்கள் வராமல் காக்கும்.