தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகன் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர், சிம்பு. பிரச்னைகளுடன் ரிலீஸான ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்துக்குப் பிறகு சிம்பு மணிரத்னம், சுந்தர்.சி படங்களில் நடித்தாலும் பிரச்னை முடிந்தபாடில்லை.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த `மாநாடு’, டிராப் என்ற செய்தி வந்த பிறகு, 125 கோடி செலவில் ‘மஹாமாநாடு’ தயாராகவிருக்கிறது என சிம்பு சார்பாக அறிக்கைகள் விடுக்கப்பட்டன.
இது மட்டுமல்லாமல், ஞானவேல்ராஜா தயாரிக்கும் `மப்டி’ ரீமேக்கின் படப்பிடிப்பில் இருந்து இடையிலேயே வந்ததாகவும் ஒரு புகார் இருந்தது.
இது குறித்து சமரசம் பேச அழைத்தபோது சிம்புவின் நண்பர்களோ, உறவினர்களோ சரியான பதிலளிக்காததால் கடுப்பின் உச்சத்துக்குச் சென்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இதையடுத்து தயாரிப்பாளர்களான ‘மாநாடு’ – சுரேஷ் காமாட்சி, `விண்ணைத்தாண்டி வருவாயா 2′ – விஜய ராகவேந்திரா, ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் நிறுவனர் பூமி பில்டர்ஸ் சுந்தர் என சிம்புவுக்கு முன் பணம் கொடுத்த அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் சிம்பு மீது ஃபோர்ஜரி புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் பெயரில் தாய்லாந்துக்கு சுற்றுலாவுக்கு சென்றிருக்கும் சிம்புவை தாய்நாடு வரவழைக்க ஏதுவாக அவரின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.