பிரபாகரன் தான் அப்படி செய்ய சொன்னார்: லண்டனில் திருமாவளவன் ….

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட லண்டன் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன், அவருடைய அமைப்பாய் திரள்வோம் என்ற நூலை வெளியீட்டார். இந்த நிகழ்ச்சி தொடங்கும் போதே குழப்பம் ஏற்பட்டதாகவும், அதனை தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

மேலும் அங்கே கூடியிருந்தவர்களிடம் நிதியுதவி கேட்டதாகவும், அப்போது அங்கே குழுமியிருந்த ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் பணம் தானே? எடுத்துக்கொள் என்று வீசி எறிந்து கடுமையாக நடந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன் பிறகு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் கூட்டணி அமைத்தது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய திருமாவளவன், 2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து எல்லோரும் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் அதிகப்படியான குண்டுகளைப் போடுகிறார்கள்.

நீங்கள் ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத் தெரிவித்தார்.

நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தியுங்கள். தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம் சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன் என திருமாவளவன் பேசியுள்ளார்.