கர்நாடகாவில் பல நாட்களாக தொடர்ந்த அரசியல் பரபரப்பு சில நாட்கள் முன்பு முடிந்து, காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கூட்டணி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து, மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து சில வாரங்களே ஆன நிலையில், மீண்டும் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு காவல் ஆணையர் பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், பாஸ்கர ராவ் சமீபத்தில் எடியூரப்பாவால் காவல் ஆணையர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் காவல் ஆணையர் பாஸ்கர ராவ், இடைத்தரகர் ஒருவரிடம் பேசி, தனக்கு காவல் ஆணையர் பதவியை பெற்றுத்தருவதற்கு பேரம் பேசிய தொலைப்பேசி உரையாடல் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து விசாரணை துவங்கிய போது, பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோரின் தொலைப்பேசி உரையாடல்கள் கடந்த சில மாதங்களாக ஒட்டுக் கேட்கப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து முன்னாள் முதல்வர் குமாரசாமி சாமியிடம் கேட்டதற்கு தனக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுள்ளனர். இதனையடுத்து அறிக்கை அளிக்கும்படி தலைமை செயலாளரிடம் முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுள்ளார்.