நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால் அக்கட்சியிலிருந்து தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட முன்னணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது அமமுகவிற்கும் தினகரனுக்கு அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஒவ்வொரு நாளும் அமமுகவிலிருந்து யார் வெளியேறுவார்கள் என்ற நிலைமைக்கு போனது.
சமீபத்தில் நடிகர் ரஞ்சித் அமமுகவிலிருந்து இருந்து வெளியேறுகிறார் என்று வதந்தி பரவியது. பின்னர் இதற்கு பதிலளித்த நடிகர் ரஞ்சித் நான் கட்சி மாறவில்லை அமமுகவிலிருந்து விலகியதாக பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கூறினார்.
இந்தநிலையில், நடிகை வினோதினி அமமுக பொது செயலாளர் தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது நடிகர் ரஞ்சித்தும் உடனிருந்தார். நடிகை வினோதினி விசு இயக்கத்தில் வெளியான மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ள இவர், பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.






