அனைத்து டாஸ்மாக் கடைகளை மூட, மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

நாட்டின் 73-வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

இதற்கான அணிவகுப்பு ஒத்திகை ராஜாஜி சாலையில் இன்று காலை நடைபெறுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான விதிகளின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், பார்கள், ஓட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர். சித்தா லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

இதைமீறி மதுபானங்களை விற்றால், மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.