யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இணுவில் இணைப்பு வீதியில் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலை முன்பாக ஆவா குழு உறுப்பினர் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆவா குழுவில் இருந்து விலகிச் சென்ற கொலின் குழு எனப்படும் மற்றொரு குழுவின் தலைவன் மீது தாக்குதல் நடாத்தவே இணுவில் பகுதிக்கு மூன்று மோட்டார் சைக்கிள்களில் இவர்கள் வந்துள்ளதாக இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களில் இருந்து சந்தேகிப்பதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந் நிலையில் மானிப்பாய் – இணுவில் சம்பவம் தொடர்பில் கொல்லப்பட்ட ஆவா குழு உறுப்பினருடன் அப்பகுதிக்கு வந்து, பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை அடுத்து, தப்பியோடிய 5 ஆவா குழு உறுப்பினர்களில் இருவரை நேற்று மாலை ஆகும் போதும் பொலிஸார் அடையாளம் கண்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர வீரகேசரிக்கு கூறினார்.
அடையாளம் காணப்பட்டோரைக் கைது செய்யவும் ஏனையோரை அடையாளம் காணவும் விஷேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வருடத்தில் நேற்று வரையிலான காலப்பகுதிக்குள் மட்டும் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 27 ஆவா குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம் இரவு 8.40 மணியளவில், யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவின் இணுவில் இணைப்பு வீதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர். ஆவா குழு இணுவில் பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் நடத்த வருவதாக மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, முன் கூட்டியே பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைப்படி, கோப்பாய், மானிப்பாய் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவினர் இரவு நேர விஷேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் பல இடங்களிலிலும் பாதைகளில் வாகனங்களை சோதனை செய்துள்ளனர். அதன்படியே இணுவில் இணைப்பு வீதியிலும் பொலிஸ் குழுவொன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன்போது ஒரே நேரத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் வேகமாக வருவதை அவதானித்துள்ள பொலிஸார் அம்மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு சமிக்ஞை காண்பித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாது அவர்கள் தொடர்ந்தும் மோட்டார் சைக்கிளில் முன் நோக்கி பயணிக்கவே, பொலிஸார், தமது தற்காப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர்.
இதன்போது என்.பி. பீ.எப்.ஏ.4929 எனும் இலக்கத்தை உடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது துப்பாக்கி தோட்டாக்கள் இரண்டு பாய்ந்துள்ளன.
இதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடின்றி அருகில் இருந்த மதிலுடன் மோதி விழுந்துள்ளதுடன், குண்டடிபட்ட இளைஞனும் படுகாயமடைந்துள்ளான். இதனையடுத்து 22 வயதான கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் எனும் அந்த இளஞனை பொலிஸார் யாழ். வைத்தியசாலையில் அனுமதித்தனர், எனினும் அங்கு சிகிச்சைப் பலனின்று அவ்விளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் நேற்று குறித்த இளைஞன் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் யாழ். வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்போது துப்பாக்கிச் சூட்டினால் அதிக இரத்தம் வெளியேறியதால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து குறித்த மோட்டார் சைக்கிளுக்கு மேலதிகமாக 2 வாள்கள், மேலும் இரு கூரிய ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகடும் போலியானது என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ள பொலிசார் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஆவா உறுப்பினர் ஒருவரினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பணப் பை ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இந் நிலையிலேயே மீள தலை தூக்கும் ஆவா குழுவை ஒடுக்கவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யவும் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய மானிப்பாய், கோப்பாய் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி நான்கு விஷேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.