இலங்கை நடுவரை முறைத்த ராய்க்கு நேர்ந்த கதி!

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில், நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பர்மிங்காமில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.

இங்கிலாந்து இன்னிங்ஸின் போது 20 வது ஓவரில், இங்கிலாந்து வீரர் ஜோசன் ராய் 85 ஓட்டங்களில் துடுப்பாட, அவுஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் வீசிய பந்தை அடிக்க முயற்சிக்கும்போது, பந்து துடுப்பில் படாமல் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது.

கேரி, அவுட் என்று முறை யிட்டதும் இலங்கை நடுவர் குமார் தர்மசேனா, விரலை உயர்த்தி விட்டார். அதிர்ச்சி அடைந்த ராய், பந்து பேட்டில் படவில்லை என்று நடுவரிடம் வாக்குவாதம் செய்தார்.

இங்கிலாந்து அணியின் டி.ஆர்.எஸ். வாய்ப்பு பயன்படுத்தப்பட்டு விட்ட தால் வேறு வழியின்றி அதிருப்தியோடு பெவிலியன் திரும்பிய ராய் கோபத்தில் துடுப்பை தரையில் அடித்தார்.

டிவி. ரீப்ளேயில் அது அவுட் இல்லை என்று தெளிவாக தெரியவந்தது. இந்நிலையில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக, ராய்க்கு போட்டிக் கட்டணத்தில், 30 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.