இந்திய அணிக்கு, இங்கிலாந்தில் ஏற்பட்ட அடுத்த சோகம்!

உலகக்கோப்பை தொடரானது, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரினை ஐசிசி நடத்துவதால், போட்டிகளின் அட்டவணை முதல், வீரர்களின் தங்கும் விடுதிகள் முதல், பயிற்சி மைதானங்கள் வரை அனைத்து ஏற்பாடுகளையும் ஐசிசி தான் செய்து வருகிறது.

உலகக்கோப்பை விளையாட சென்ற இந்திய அணிக்கு, ஏற்கனவே சௌகரியமான சூழல் அங்கே நிலவவில்லை, இரண்டு மூன்று மணி நேர மழைக்கே, ஆட்டத்தினை கைவிடுவது எல்லாம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் அமைந்தது.

இது ஒரு புறம் என்றால் வீரர்கள் மைதானம் செல்ல தனியாக பேருந்துகள் ஒதுக்கப்படாமல், ரயில்களில் பயணிப்பது, வீரர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதுடன், ரசிகர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு வீரர்கள் மிகவும் சிரமப்படுவது வேதனையளிக்கிறது.

இந்நிலையில், இந்திய வீரர்கள் தற்போது தங்கியுள்ள விடுதியின் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கு போதுமான உபகரணங்கள் இல்லாததால் தனியார் உடற்பயிற்சி கூடத்தில், பயிற்சி எடுத்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்திய அணி நிர்வாகம் உறுதியும் செய்துள்ளது.