கர்நாடக சிங்கமான அண்ணாமலை – திடீரென எடுத்த திடுக்கிடும் முடிவு.?

பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக இருந்தவர் அண்ணாமலை. பல அதிரடி நடவடிக்கை மூலமாக கர்நாடக மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர்.

காவல்துறை நிர்வாகத்திலும் பணிச்சுமையால் அவதிப்பட்ட போலீசாருக்கு கண்டிப்பாக வாரவிடுமுறை அளிக்கும் நடைமுறையை அமல்படுத்தினார்.

இந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அவர் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

இதன் தொடர்ச்சியாக நேற்று ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூவிடம் வழங்கினார்.

ராஜினாமா செய்துள்ள ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்.

மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த அண்ணாமலை எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வானதை தொடர்ந்து உடுப்பி மாவட்டம் கார்கலாவில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கிய அவர் உடுப்பி, சிக்கமகளூரு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்தார்.

சிக்கமகளூருவில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பின்னர் அவர் பெங்களூரு துணை போலீஸ் கமிஷனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

உடுப்பி, சிக்கமகளூருவில் பணி செய்தபோது அவர் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார்.

இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து வந்ததன் மூலம் பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.