திமுகவின் இந்த ஆசையாவது நிறைவேறுமா? எதிர்பார்ப்பில் உடன்பிறப்புகள்!

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழக அளவில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்ட 19 தொகுதிகளிலும், திமுக வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளும், ஆகமொத்தம் திமுக பெயரில் 23 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தல் தொடங்கும் முன் திமுக காங்கிரஸ் கூட்டணி வைத்து இருந்தாலும், மூன்றாவது அணி என்ற ஒன்று அமைக்கப்பட்டு இருந்தால், அதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரதமர் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது என விவாதிக்கப்பட்டது. ஆனால் மூன்றாவது அணியில் பிரதமர் கனவில் இருந்த அனைவரின் கனவையும் பாஜக தவிடுபொடியாக்கி விட்டது. அதனால் ஸ்டாலினின் பிரதமர் கனவு பறிபோனது.

அதே போல தமிழகத்தின் முதல்வராக ஆகிவிட வேண்டும் என இடைத் தேர்தலை சந்தித்த திமுகவிற்கு குறிப்பிடத்தகுந்த வெற்றி கிடைத்தும், தேவையான அளவு வெற்றி கிடைக்காத அளவிற்கு அதிமுகவிற்கு கூட்டணிக் கட்சியான பாமக ஆதரவு அமைந்துவிட்டது. பாமக பலம் வாய்ந்த அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர் தொகுதியில் அதிமுக வென்றது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் கனவும் பறிபோனது, முதல்வர் கனவு பறிபோனது. இதனிடையே மூன்றாவது அணி அங்கே ஆட்சியை பிடித்து, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் இங்கே ஸ்டாலின் முதல்வர் எனவும், அங்கே கனிமொழி துணைப்பிரதமர் எனவும் கனவு கண்டது மட்டுமின்றி, அதை திமுக ஆதரவு ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்தியாக வெளியிடவும் செய்தார்கள். திமுக ஆதரவு ஊடகங்கள் இதனையே முன்னிலைப் படுத்திச் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் அங்கே கூட்டணி ஆட்சிக்கோ, துணை பிரதமருக்கோ வேலையில்லாமல் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று விட்டது. அதனால் பிரதமர், துணை பிரதமர், முதல்வர் என அனைத்துமே கனவாகவே போய்விட்டது. தற்போது விசிக, மதிமுக தயவால் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுகவிற்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி கிடைக்கும் என திமுக எதிர்பார்ப்பதாக திமுக ஆதரவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. ஆனால் பாஜகவிற்கு அப்படி ஒரு திட்டமே இல்லை என்றே செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

திமுக அந்த பதவியை இதனடிப்படையில் எதிர்பார்க்கிறார்கள் என்றால், கடந்த முறை மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுகவிற்கு அந்த வாய்ப்பை பாஜக வழங்கியிருந்தது என்பதால் தான். ஆனால் அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர், முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு விருப்பமான தலைவர் மட்டுமல்லாமல், நல்ல ஒரு நட்புடன் இருக்கும் தலைவர்களாகவும் இருந்தார்கள். அதனால் அதிமுகவிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது அதே போல மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுகவிற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என திமுக வட்டராம் எதிர்பார்க்கிறது. ஏனெனில் 38 தொகுதிகளை வென்றும் எவ்வித அதிகாரமும் இல்லாமல் தான் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் திமுக உள்ளது. உறுப்பினர்களாக மட்டும் இல்லாமல் மக்களவைத் துணை சபாநாயகர் பதவி கனிமொழிக்கு கிடைத்தால் கௌரவமாக இருக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது திமுக.

ஆனால் பாஜக தரப்பில் தனியாக போட்டியிட்டு 22 இடங்களை கைப்பற்றி இருக்கும் YSR காங்கிரஸ் கட்சிக்கு அந்த இடத்தை வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதே அளவிலான இடத்தினை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. திமுக தனியாக 19 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர், துணை பிரதமர், முதலமைச்சர் என ஒவ்வொரு கனவும் சிதைந்து போக இறுதியாக துணை சபாநாயகர் என்ற கனவில் திமுகவினர் தற்பொழுது இருந்து வருகிறார்கள். ஆனால் இதுவும் கனவாகவே தான் போகும் என்ற நிலையே தற்போது வரை நீடிக்கிறது. மிகப்பெரிய வெற்றியை பெற்றும் திமுகவினர் அதனை கொண்டாட முடியாமல் தவிக்கின்றனர்.