`இந்தப் பாவமான உறவினால் கொன்றேன்!’- பெண் கொலையில் சிக்கிய 10 பக்க கடிதம்…

சேலத்தில் ஒரு முதியவரின் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகப் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஜங்ஷன் பகுதியில் பாண்டியராஜன் என்பவருக்குச் சொந்தமான ஐஸ்க்ரீம் கடை உள்ளது. இந்தக் கடையில் கடந்த 6 மாதமாக  ஷகிரா (பெயர் மாற்றம், 25) என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.

வழக்கம்போல நேற்று ஷகிரா வேலைக்கு வந்ததும் கடையின் உரிமையாளர் பாண்டியராஜன் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டார். பிறகு திரும்பி வந்து பார்க்கும்போது கடையின் ஷட்டர் உள்பக்கமாக தாழிட்டு இருந்தது.

பாண்டியராஜன் அக்கம் பக்கத்தினர் உதவியோடு ஷட்டரை திறக்க முயன்றார். வெகுநேரமாகியும் ஷட்டர் திறக்க முடியாததால் சந்தேகம் அடைந்த பாண்டியராஜன் சூரமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார்.

அதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் ஷட்டரை உடைத்துப் பார்க்கும்போது ஷகிரா கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அருகே முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

அதையடுத்து, காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் திருமணமாகி கணவனைப் பிரிந்து வாழ்ந்த ஷகிராவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இனாமுல்லா (54). என்பவருக்கும் சில வருடமாகத் தொடர்பு இருந்து வந்தது.

இந்தத் தகவல் அறிந்த இருவரின் குடும்பத்தினரும் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். இந்த நிலையில், நேற்று காலை ஷகிராவை சந்திக்க, இனாமுல்லா வேலை செய்து வந்த ஐஸ்க்ரீம் கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த இனாமுல்லா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷகிராவை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு உடனடியாக அதே கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இனாமுல்லா எழுதிய 10 பக்க கடிதத்தையும் கைப்பற்றியுள்ளார்கள். அந்தக் கடிதத்தில்,  “எனக்கும் ஷகிராவுக்கும் இருந்த பாவமான உறவினால் கொலை செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.