ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுத்து பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானின் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு நிலைகளை அழிக்க முயன்றன.
இதனை இந்திய விமானப்படை தடுத்து நிறுத்தி பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தார். பின் பாகிஸ்தான் ராணுவம் அவரைக் கைது செய்தது.
பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த அபிநந்தனின் வீடியோ காட்சிகளை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது. அதில் எதிரி நாட்டு ராணுவத்திடம் சிக்கியுள்ளோம் என்ற பயம் சற்றும் இல்லாமல் மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார் அபிநந்தன்.
மேலும், இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. மக்கள் அபிநந்தனின் துணிச்சலையும் தைரியத்தையும் வெகுவாகப் பாராட்டினர். பின் உலக நாடுகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக அவரை விடுதலை செய்தது.
இந்நிலையில், அபிநந்தன் பெயரில் ஹரியானாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் புதிய இட ஒதுக்கீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம் இத்திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன் கீழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் ஒரு சதவீதம் இடங்கள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே விமானி அபிநந்தனின் வீரம் பள்ளிப் பாடப்புத்தகத்திலும் இடம்பெறும் என்று ராஜஸ்தான் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தோஸ்தாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.