மழையால் பாதித்த ஆட்டம்..

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி டர்பனில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 331 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக டி காக் 121 ஓட்டங்களும், வான் டர் டுசன் 50 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் உதானா 2 விக்கெட்டுகளும், ரஜிதா, மலிங்கா மற்றும் மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆனால், மழை குறுக்கிட்டதால் 24 ஓவர்களில் இலங்கை 193 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 24 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 41 ஓட்டங்கள் எடுத்தார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 0-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி, போர்ட் எலிசபெத்தில் வரும் 13ஆம் திகதி நடக்க உள்ளது.