குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா!

சென்னையில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யவும் சென்னை முழுவதும், தனியார் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரால் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்ற நல்லெண்ண நோக்கத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு உதவியாக சென்னையை சேர்ந்த 3 ஆம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி ஸ்ரீஹிதா போலீசாருக்கு ரூ.1½ லட்சம் வழங்கி உள்ளார்.

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் சத்யநாராயணா என்பவரின் மகள் ஸ்ரீஹிதா. சத்யநாராயணா ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீஹிதா தனது தந்தையின் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்த ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

இதனை கவனித்து கொண்டிருந்த சிறுமி ஸ்ரீஹிதா, எதற்கு இந்த கேமரா என தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு சத்யநாராயணா கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளிகளை எளிமையாக அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யமுடியும். மேலும் குற்றங்களை தடுக்கமுடியும் என கூறியுள்ளார். உடனே அந்த சிறுமி ஸ்ரீஹிதா கேமராக்கள் பொருத்துவதற்கு தனது சேமிப்பு பணத்தில் இருந்த ரூ.1½ லட்சத்தை வழங்கலாம் என கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து சத்யநாராயணா ஸ்ரீஹிதாவை அழைத்து சென்று போலீஸ் அதிகாரிகளை சந்தித்து கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு ரூ.1½ லட்சத்தை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சிறுவயதிலேயே குற்றங்களை தடுக்கவேண்டும் என பொதுநலத்துடன் நடந்துகொண்ட சிறுமி ஸ்ரீஹிதாவை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார்.