அம்மை நோய் பரவி வரும் நிலையில் புதிதாக முளைத்துள்ள சிக்கல்!

கனடாவின் வான்கூவர் பகுதியில் அம்மை நோய் பரவி வரும் நிலையில், ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பிரிவைச் சார்ந்தவர்களால் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வான்கூவர் பகுதியில் மண்ணன் அல்லது மணல்வாரி என்று அழைக்கப்படும் measles நோய் பரவி வருகிறது. அது வைரஸ் ஒன்றினால் பரவும் ஒரு தொற்று நோய்.

இந்த நோய்க்கு பொதுவாக அலோபதி வகை அதாவது ஆங்கில மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படுவதுண்டு.

ஆனால் ஹோமியோபதி மருத்துவர்கள் சிலர் இந்த நோயை தடுப்பதற்காக புதிய வகை மருத்துவம் ஒன்றை செயல் படுத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

இவ்வகை மருத்துவம், சின்னம்மை, காலரா மற்றும் போலியோ போன்ற நோய்களை குணமாக்க பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சிலர் விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த மருத்துவத்தில், ஏற்கனவே அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரிடமிருந்து இரத்தம் திசுக்கள் போன்றவற்றை எடுத்து அதை நீர்க்கச் செய்து அதிலிருந்து தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வகை சிகிச்சைகள் சில, அரசால் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாதென்றும், இத்தகைய மருத்துவம் தொற்று நோயை தடுக்கும் என்று விளம்பரம் செய்வது சட்டத்தை மீறும் செயலாக கருதப்படலாம் என்றும் கனடாவின் மருத்துவத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இம்மாதிரியான விளம்பரம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தேவையானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தகவல் வெளியானதும் இணையத்தில் விளம்பரம் செய்திருந்த சிலர் அவசர அவசரமாக தங்கள் விளம்பரங்களை அகற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.