30 நிமிடங்களில் நடந்த தாக்குதல்.. வெளியான புகைப்படங்கள்

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், இந்திய விமானப்படை ஊடுருவ முயன்ற போது பாகிஸ்தான் வெடிகுண்டுகளை வீசி தக்க பதிலடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய இராணுவம் இன்று அதிரடி தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதல் காரணமாக சுமார் 300 பாகிஸ்தானியார்கள் இறந்திருப்பதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தலைமையில் இஸ்லாமாபாத்தில் அவசரக் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் மூத்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தங்களது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்போம் என்றும், தங்கள் நாட்டில் போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இந்த தாக்குதல் நடத்தியது குறித்து இந்திய விமானப்படை வட்டாரங்கள் கூறுகையில், பஞ்சாப்பின் அம்பாலா விமானப்படை முகாமில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட விமானங்கள், சர்வதேச எல்லையை தாண்டாமல் குண்டுகளை வீசியது.

மொத்தம் முப்பது நிமிடங்கள் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்ப வந்தன. சுமார் அதிகாலை மூன்றிலிருந்து மூன்றரை மணி வரை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்று தெரிவித்தது.

இதையடுத்து இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்திய விமானப் படை எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடக்க முயன்றது. ஆனால், பாகிஸ்தான் துரிதமாக செயல்பட்டுவிட்டது.

இந்திய விமானப்படை முசாபராபாத் பகுதியில் இருந்து ஊடுருவ முயன்றது. ஆனால், பாகிஸ்தான் வெடிகுண்டுகளை வீசி தக்க பதிலடி கொடுத்து இந்திய விமானப் படையை திருப்பி அனுப்பியது, பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானப்படை விமானங்களை துரிதமாக தாக்கியதில் தப்ப முயன்ற இந்திய விமானப் படை விமானங்கள், பாலகோட் பகுதியில் விழுந்தது.

இதில் எந்தவித உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பாகிஸ்தானின் F16 ரக போர் விமானங்கள் பதில் தாக்குதலுக்கு வந்தாகவும் இந்தியாவின் மிராஜ் ரக விமானத்தின் அணிவகுப்பை பார்த்து பின்வாங்கிவிட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.