புல்வாமா தாக்குதல் சம்பவத்தால் இந்தியா – பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்தியா துணை இராணுவ வீரர்கள் சென்ற 70 வாகனத்தில், இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 க்கும் மேற்பட்ட இந்தியா துணை இராணுவர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பு தான் என்று இந்தியா அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு மறுத்து உள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்து தெரிவித்து, இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் மோடி அவர்கள், என் நெஞ்சம் நெருப்பாய் எரிகிறது, இந்த தாக்குதலுக்கு பதிலடி உறுதி, இதற்கான விலையை பாகிஸ்தான் கொடுத்தாக வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்தார். மேலும் இந்தியா இராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்றும் என்ற கேள்வி இந்தியா மக்களிடம் மேலோங்கி உள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்கள் தெரிவிக்கையில், தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் தயங்க கூடாது. இதனையே ஜி-20 நாடுகள் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், அர்ஜெண்டினாவும் கூட்டாக முடிவு செய்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அதற்கு ஆதரவு அளிப்பதற்கு சமம். பாகிஸ்தானு அளிக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. இனிமேல் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை.. நம் இனி செயலில் இறங்குவதற்கான சரியான நேரம் இதுதான்” என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம், பிகேனர் மாவட்ட நிர்வாகம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும். ஹோட்டல் மற்றும் லாட்ஜ்களில் தங்குவதற்கு பாகிஸ்தான் குடிமக்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.
மேலும், இந்திய குடிமக்கள் பாகிஸ்தான் மக்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வணிகத்தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது. பிகேனர் மாவட்டத்தை சேர்ந்த யாரும் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை உபயோக படுத்தக்கூடாது. யாரும் பாகிஸ்தானுடன் எந்த தகவல் பரிமாற்றமும் செய்யக்கூடாது. இந்த உத்தரவு இன்னும் 2 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று பிகேனர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்ற கூட்டத்திற்கு அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில்,
* பாகிஸ்தான் மக்களை பாதுகாக்கும் வலிமையும், திறனும் பாகிஸ்தான் அரசுக்கு நிச்சயம் உள்ளது.
* மக்களை பாதுகாப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
* புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க நாம் தயாராக உள்ளோம்.
* இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது.
* ஆக்கிரமிப்பு நோக்கத்திலோ அல்லது வேறு விபரீத (பதிலடி-போர்) எண்ணத்திலோ இந்தியா ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால், அதற்கு தக்க பதிலடி கொடுத்து திரும்ப தாக்குங்கள்
என்று அந்த உத்தரவில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.






