திருவாரூரில் நீதிமன்ற வளாகத்திற்குள் குற்றவாளி ஒருவரை போலீசார் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நீதிமன்றத்திற்குள் போலீசார் அத்துமீறிய சம்பவத்திற்கு நீதிபதி கண்டனமும் தெரிவித்தார்.
திருவாரூர் அருகே உள்ள ராதாநஞ்சை கிராமத்தில் வசித்து வருபவர் சேகர் மகன் ராஜாஜி (22). இவர் அந்த பகுதியில் சாராய வியாபாரம் செய்து வந்ததன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருவாரூர் தாலுக்கா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனின் பேரில் அங்கு தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் சாராய வியாபாரம் செய்து வருவதாக கூறி ராஜாஜி உட்பட 3 பேர்கள் மீது தாலுக்கா போலீசார் நேற்று முன்தினம் மேலும் ஒரு புதிய வழக்கினையும் பதிவு செய்துள்ள நிலையில், அந்த வழக்கு தொடர்பாக ராஜாஜியை கைது செய்ய சென்ற போது அவர் தலைமறைவானார். நேற்று வழக்கம் போல் ராஜாஜி நீதிமன்றத்தில் கையெடுத்திட வந்த போது நீதிமன்றத்திற்கு வெளியே அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர்.
அப்போது அங்கிருந்து ராஜாஜி தப்பி செல்ல முயன்று நீதிமன்ற வளாகத்திற்குள் ஓடியதையடுத்து அவரை தாலுக்கா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் மற்றும் போலீசார் வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இதனால் அடிதாங்க முடியாமல் ராஜாஜி நீதிமன்ற வளாகத்திற்குள் அங்குமிங்கும் ஓடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஏற்கனவே ராஜாஜிக்கு ஜாமீன் பெற்றுக்கொடுத்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன் என்பவர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி குமாரிடம் புகார் செய்தார்.
இதனையடுத்து நீதபதி குமார் முன்பு ராஜாஜியை ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் உடனடியாக சேர்க்குமாறு நீதிபதி குமார் உத்தரவிட்டார். நீதிமன்ற வளாகத்திற்குள் இதுபோன்று போலீசார் அத்துமீறிய சம்பவத்திற்கு கண்டனமும் தெரிவித்தார்.






