சுதந்திரக் கொடியை ஏற்றி, உயிர் விட்ட வீர இந்தியப் பெண்மணி….!

துாரத்தில் வந்து கொண்டிருந்த அந்த மக்கள் கூட்டம், காத்திருந்த ஆங்கிலேயக் காவல் அதிகாரிகளுக்கு, கானல் நீரில் நீந்தி வரும், சுறா மீன்களாகத் தான் தெரிந்தன.

அந்தக் கூட்டம் நெருங்கி வர வர, கூட்டத்தில் இருந்தவர்களையும், அவர்களிடமிருந்த ஆவேசத்தையும் கண்டு, மிரண்டே தான் போனார்கள், ஆங்கிலேயர்கள். இருந்தாலும், வெட்டி வீராப்பை வரவழைத்துக் கொண்டு, குதிரையில் ஏறிச் சென்று, அந்தக் கூட்டத்தை தடுத்து நிறுத்தினர்.

1942-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி, நடைபெற்ற, ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டத்தினரின் கூட்டம் தான் அது.

அசாம் மாநிலத்தில் உள்ள தோஜ்பூர் நகரில், நடைபெற்ற அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிச் சென்றவரைப் பார்த்ததும், துவக்கத்தில் நகைப்பாகத் தான் இருந்தது, பரங்கியருக்கு.

16 வயதான இளம் பெண், தன் குரலில், கொண்டு வந்த வீரத்தைக் கண்டு, அசந்தே போனார்கள். இவள் என்ன? சிறு பெண்ணா? பாய்ந்து வரும் புயலா? இப்படிச் சீறி வருகிறாளே, என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கனகலதா என்ற அந்தப் பெண் புலி, தன் கையில் வைத்திருந்த தேசியக் கொடியை ஏந்தியவாறு, வந்தே மாதரம், என்று முழங்கிக் கொண்டே, முன்னோக்கி ஓடினார்.

அவரைத் தடுக்க முயன்று, காவலர்கள் தோற்றுப் போயினர். வேங்கையாய் தாவிச் சென்று, காவல் நிலையத்தின் சுவற்றில் ஏறியவள், அங்கு பறந்து கொண்டிருந்த, பிரிட்டன் கொடியைப் பிடுங்கி எரி்ந்தாள்.

பின், அதே வேகத்தில், தன் கையில் வைத்திருந்த, தேசியக் கொடியை, ஏற்றி வைத்தார்.

அவ்வளவு தான்….!

அது வரை நடந்தது என்னவோ, கனவு என்று எண்ணிய காவலர்கள், அடுத்த நொடி, திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கி குண்டுகளால் துளைத்தனர்.

ஒரு காவலன், கனகலதாவிற்கு குறி வைத்தான்.

தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டிருந்த அந்த பெண் வேங்கையின் மீது பாய்ந்த, அந்நியரின் துப்பாக்கி குண்டு, அவரை அப்படியே சரிய வைத்தது.

அப்படியும், விடாமல், நம் தேசியக் கொடியை ஏந்தியபடி, அடுத்து துப்பாக்கி குண்டுக்கும் தயாராகக் காத்திருந்தார்.

“பாரத மாதாக்கீ ஜே” என்று வீர முழக்கம், தான், கனகலதாவின், இறுதி வாசகம்.

அந்த வேங்கையின் வழி நடப்போம். இந்தயாவைக் காக்க உயிர் துறக்கவும் துணிவோம்!

மதுரை ராஜா-