சுவிட்சர்லாந்தில் கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய செர்பிய நாட்டு பெண் ஒருவரை 9 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் மண்டலத்தில் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான கும்பலை சேர்ந்த பெண் ஒருவர் பாஸல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான இவர் எஞ்சிய 5 பேர் கொண்ட கும்பலுடன் இணைந்து கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அந்த குடியிருப்பின் உரிமையாளர் 71 வயதான நபரை கடுமையாக தாக்கிவிட்டு இந்த கும்பல் தப்பியுள்ளது.
தொடர்ந்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட அந்த நபர் 4 மாத சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் வைத்தே மரணமடைந்தார்.
இந்த வழக்கை விசாரித்துவந்த பொலிசாருக்கு முதலில் குழப்பமே மிஞ்சியது. தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் செர்பியா மற்றும் ஹாலந்து நாட்டவர்கள் இருவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தது.
மட்டுமின்றி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 39 வயதான அந்த ஹாலந்து நாட்டவரை சுவிஸ் பொலிசார் கைது செய்து விசாரணைக்காக சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் செர்பிய நாட்டவர்கள் இருவர் தொடர்பில் தகவல் வெளியானது.
அதில் ஒருவர் தற்போது கைதான 38 வயது பெண்மணி ஆவார். மேலும் இரு செர்பிய நாட்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாகவும், அவர்களையும் உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.