இ.போ.ச. வவுனியா சாலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையின் ஊழியர்களுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட முறைகேடான பதவி உயர்வுகளை இரத்து செய்யக்கோரி, வவுனியாவில் உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இ.போ.ச. வவுனியா சாலை ஊழியர்கள், சாலைக்கு முன்பாக இன்று (புதன்கிழமை) அதிகாலை 5.30மணி தொடக்கம் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள், “கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா சாலையின் 21 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அந்த பதவி உயர்வானது எந்தவித தகுதி தராதரம் பாராது, அரசியல் ரீதியில் முறைகேடான ரீதியில் வழங்கப்பட்டுள்ளது.

இதில் தனிமனே ஜக்கிய தேசிய கட்சி தொழிற்சங்கத்தினை சார்ந்தே வழங்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து நாங்கள் 15 ஊழியர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

முறைகேடான முறையில் வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் இரத்து செய்யப்பட்டு, முறையான நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு பதவி உயர்வு வழங்கப்படுமாயின் ஏற்றுக்கொள்வோம்.

இல்லையெனில் இன்றிலிருந்து 14 நாட்களின் பின்னர், சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என எச்சரித்துள்ளனர்.