ஏமாந்து நிற்கும் பிரபல நடிகர்! கமிஷனர் அலுவலகத்தில் அளித்த அதிரடி புகார்.!

தமிழில் கோலங்கள், திருமதி செல்வம், வள்ளி ,கல்யாண பரிசு,தமிழ் கடவுள் முருகன், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிர்லா போஸ்.அதனை தொடர்ந்து அவர் புதுப்பேட்டை, காக்க காக்க, ராம், கற்றது தமிழ், சிங்கம், தனி ஒருவன், துப்பறிவாளன், யு- டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பிர்லா போஸ் சமீபத்தில் நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று, சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பதவியேற்றார்.

இந்நிலையில், தற்போது பிர்லா போஸ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது வீட்டு உரிமையாளர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, மதுரவாயில் பகுதி, ஓம் சக்தி நகர் முதல் தெருவில் வசிக்கும் பாலாஜி என்பவரின் வீட்டை 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு வாங்கியிருந்தேன்.

இந்நிலையில், ஒரு நாள் வங்கியில் இருந்து வந்த அதிகாரிகள் சிலர், வீடு ஜப்தி செய்யப்பட்டுள்ளது. உடனே வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் பாலாஜியிடம் கேட்ட போது, அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை.

பின்னர் சில நாட்களுக்கு பிறகு, அந்த வீட்டின் உரிமையாளர் பாலாஜி இல்லை எனவும், அது ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான வீடு என்பதும் தெரிய வந்தது.

மேலும் 500 சதுர அடி கொண்ட இந்த வீட்டை 1000 சதுர அடி என்று போலியான ஆவணங்களை தயார் செய்து, பாலாஜி மற்றும் ஆறுமுகம் வங்கியில் 27 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளனர். பின்னர் பணத்தை கட்டாமல் மாயமாகியுள்ளனர்.

இந்நிலையில் வங்கி அதிகாரிகள் தன்னை வீட்டை உடனே காலி செய்ய வேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதம் அனுப்பியுள்ளனர்.

எனவே வீட்டு உரிமையாளர்களிடம் சிக்கி கொண்டிருக்கும் தனது பணத்தை மீட்டு தர வேண்டும். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிர்லா போஸ் கூறியுள்ளார்.