தினேஷ் கார்த்திக்கின் செயல்.. கோபமடைந்த ரசிகர்கள்!

ஹாமில்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் கடைசி ஓவரில், டோனியைப் போல தினேஷ் கார்த்திக் ஆட முயன்றது ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்தது. இந்திய அணி 213 ஓட்டங்கள் இலக்கை இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

நம்பிக்கை நட்சத்திரம் டோனி 2 ஓட்டங்களிலேயே அவுட் ஆன நிலையில், தினேஷ் கார்த்திக் மற்றும் குர்ணால் பாண்ட்யா இருவரும் வெற்றிக்காக போராடினர். இருவருமே அதிரடியாக ஆடினர்.கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அப்போது தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்தில் 2 ஓட்டங்களை அவர் எடுத்த நிலையில், இரண்டாவது பந்து மெய்டன் ஆனது. பின் 3வது பந்தை ஸ்ட்ரெய்ட் திசையில் அடித்தார். ஒரு ரன் எடுக்க வேண்டிய சூழலில் தினேஷ் கார்த்திக் ரன்னுக்காக ஓடாமல் நின்றார்.

மேலும் எதிர்முனையில் இருந்து ஓடி வந்த குர்ணால் பாண்ட்யாவிடம் ஒரு ரன் வேண்டாம் என்று கூறி நிறுத்தி விட்டார். இதற்கு காரணம், தினேஷ் கார்த்திக் நிதாஹஸ் கோப்பை இறுதி ஆட்டத்தின் கடைசி ஓவரில் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். அதேபோல் இந்தப் போட்டியிலும் ஆட நினைத்தார்.

ஆனால், சௌதியின் அபார பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்-ஆல் சிக்சர், பவுண்டரி எதுவும் விளாச முடியவில்லை. இதனால் அவரால் அடுத்தடுத்த பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் குர்ணால் ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தில் 11 ஓட்டங்கள் அடிக்க வேண்டிய நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்தார்.

இதன்மூலம் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. வழக்கமாக இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், டோனி எதிர்முனையில் இருக்கும் வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் தானே அணியை வெற்றி பெற வைப்பார். அதே பாணியை பின்பற்ற நினைத்த தினேஷ் கார்த்திக் வெற்றியை தவறவிட்டார்.

இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், வெறுப்பையும் அளித்தது. இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் 16 பந்துகளில் 33 ஓட்டங்களும், குர்ணால் 13 பந்துகளில் 26 ஓட்டங்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.