கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள பூங்காவில், புதிதாக பிறந்த பிஞ்சுக்குழந்தை ஒன்று தனியாக கைப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லண்டனில் ஈஸ்ட் ஹாம் பகுதி அருகே பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகள் மற்றும் நாயுடன் இரவு 10 மணிக்கு வாக்கிங் சென்றுகொண்டிருந்துள்ளார்.
அந்த சமயம் அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. அப்போது குழந்தை ஒன்று அழுதுகொண்டிருக்கும் சத்தம் கேட்டு பெண் திடுக்கிட்டுள்ளார்.
சத்தம் வரும் பகுதியை நோக்கி சென்ற போது, அங்கிருந்த பொருட்கள் வாங்கும் பையில் வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டு ஒரு அழகிய பெண் குழந்தை இருப்பதை பார்த்துள்ளார்.
உடனே அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பொலிஸார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
லண்டன் மருத்துவமனையில் தற்போது குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைக்கு ரோமன் என பெயர் வைத்து கவனித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள இன்ஸ்பெக்டர் ஷேன் கிளார்க், “நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை அறிவது எங்களுக்கு மிகவும் முக்கியம். விரைவில் பொலிசாரை தொடர்புகொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என குழந்தைக்கு தாய்க்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், இதுகுறித்த தகவல் யாருக்கேனும் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும். இது குழந்தையை அவரது தாயுடன் சேர்ப்பதற்கு உதவும் என தெரிவித்துள்ளார்.






