நீண்ட நாள் காதலியை மணக்கிறாரா டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால்?

ஸ்பெயினின் பிரபல டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால், கடந்த 14 ஆண்டுகளாக காதலித்து வந்த ஸீஸ்கா பெரில்லோ என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக டென்னிஸ் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தார்.

ஸீஸ்கா பெரில்லோ என்ற பெண்ணை 14 ஆண்டுகளாக நடால் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு அவரை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பெரில்லோ தொழில்முனையில் பட்டம் பெற்றவர் என்றும், நடாலின் பவுண்டேஷனில் அவர் திட்ட இயக்குநராகவும் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடாலின் ஆட்டத்தை தொடர்ச்சியாக நேரில் பார்க்கவில்லை என்றாலும் அவ்வப்போது மைதானத்தில் பெரில்லோ இருப்பார்.

ஆனால், பெரில்லோ ஊடகங்களை தொடர்ந்து தவிர்த்து வருகிறார். இந்நிலையில், இவர்களின் திருமணம் இந்தாண்டு நடாலின் சொந்த ஊரான மலோர்காவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய நடால், தனது திருமணம் குறித்து தற்போது எதுவும் யோசிக்கவில்லை என்றும், டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு திருமணம் குறித்து யோசிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

எனினும் ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தியை ரஃபேல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.