கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் விபத்து ஏற்படுத்திய பிரித்தானிய இளவரசர் பிலிப், காயமடைந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
பிரித்தானிய இளவரசரும் மகாராணியாரின் கணவருமான பிலிப், கடந்த 17ம் தேதி கார் ஒட்டி சென்ற போது, சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட் அருகே உள்ள சாலையில் விபத்தில் சிக்கினார்.
உள்ளூர் நேரப்படி பகல் 3 மணியளவில் நடந்த சாலை விபத்தில் இளவரசர் காயமின்றி தப்பினாலும், அவரால் விபத்தில் சிக்கிய மற்றொரு பெண்ணுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவமானது பிரித்தானியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தன்னுடைய தவறுக்கு வருந்துவதாக இளவரசர் பிலிப், காயமடைந்த எம்மா (46) என்கிற பெண்ணுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதம் விபத்து நடந்த 4 நாட்கள் கழித்து எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண்மணியின் கைகளுக்கு 2 நாட்கள் கழித்தே கிடைத்துள்ளது.
அந்த கடிதத்தில், விபத்து நடந்ததும் அதிகமான மக்கள் கூட்டம் திரள ஆரம்பித்தது. அதனால் சாண்டிங்ஹாம் ஹவுஸிற்கு திரும்புமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டேன்.
அதன் பிறகே உங்களுக்கு கை உடைந்ததை பற்றி அறிந்து கொண்டேன். உங்களுடைய காயத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன். துன்பகரமான அனுபவத்திலிருந்து விரைவில் மீண்டு வர விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.






