சேலம் அருகே வீராணம் பள்ளிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் மாதேஷ். 27 வயது நிறைந்த இவர் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த ஆண்டு கர்ப்பமான சசிகலா பிரசவத்திற்காக தளவாய்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார்.அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த காயம் சரியாகாததால் சசிகலா பெற்றோர் வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை மாமனார் வீட்டுக்கு வந்த மாதேஷ் திடீரென கதவை பூட்டிக்கொண்டு மனைவி சசிகலாவை காலால் மிதித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் இதுதொடர்பாக சசிகலாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் மாதேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர் கூறியதாவது,
நான் எனது குழந்தையை பார்க்க மாமனார் வீட்டுக்கு வந்தேன். அங்கு எனக்காக அசைவ உணவு சமைத்து வைத்திருந்தனர்.
பின்னர் எனது மனைவி என்னை சாப்பிட கூறி, சாப்பாடு எடுப்பதற்காக சமையலறைக்கு சென்றார். மேலும் எனது மாமியார் மற்றும் உறவினர்கள், நீண்ட நாட்கள் கழித்து நான் வந்திருந்ததால், வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நான் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு பூட்டிவிட்டு , எனது மனைவியை படுக்கை அறைக்குள் தள்ளி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். அதற்கு அவரோ மறுப்பு தெரிவித்து, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளதாகவும், அதனால் உடல்நிலை குணமடையும் வரை சில நாட்கள் பொறுத்துக் கொள்ளுமாறும் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்தேன்.
இந்நிலையில் சத்தம் எதுவும் வராததால் சந்தேகம் அடைந்த சசிகலாவின் தாய் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது, நான் மனைவியின் கழுத்தில் காலை வைத்து மிதித்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, எனது மகளை விட்டு விடு என கதறினார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் நான் சசிகலாவின் கழுத்தை காலால் மிதித்து கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.