பரிதமாக பலியான, பள்ளி மாணவர்கள்! கொந்தளித்த மக்கள்!

கோவை வேடப்பட்டியை சேர்ந்தவர் மனோ. இவரது மகன் டேனியல், அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய நண்பரான அதேபகுதியை சேர்ந்த தரணீஸ்வரன் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று இரவு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்களில் வீர கேரளத்தில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர். டேனியல் மோட்டார் சைக்கிளை ஓட்ட தரணீஸ்வரன் பின்னால் அமர்ந்திருந்தார். வேடப்பட்டி- வீரகேரளம் சாலையில் உள்ள ஒரு பால் பண்ணை அருகே சென்ற போது எதிரே வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த டேனியல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய தரணீஸ்வரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவரும் பரிதாபமாக பலியானார்.

விபத்து நடந்ததும் ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே அங்கு திரண்ட பொதுமக்கள் ஆவேசமடைந்து, காரை அடித்து உடைத்து உள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வடவள்ளி காவல் துறையினர், விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய காரை கோவையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.