காவல்நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்!

சென்னை எண்ணூர் ராமமூர்த்தி நகரில் வசித்து வருபவர் பரமசிவம் என்ற பர்மா. 20 வயது நிறைந்த இவர் மீது ஏகப்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என கூறப்படுகிறது.

இந்நிலையில் பரமசிவத்தையும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரையும் நேற்று முன்தினம் செங்குன்றம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் பரமசிவத்தின் மனைவி ரேகா தனது கணவரை காண்பதற்காக போலீஸ் நிலையத்தின் உள்ளே சென்றுள்ளார். அப்பொழுது அங்கு போலீசார் அவரது கணவர் பரமசிவத்தை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ரேகா காவல் நிலையம் எதிரே அதிக வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, தனது கைக்குழந்தையுடன் திடீரென சாலையின் குறுக்கே சென்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் .

ஆனால் வாகன ஓட்டிகள் சாமர்த்தியத்தால் ரேகா மீது வாகனங்கள் மோதுவது தவிர்க்கப்பட்டு, கைக்குழந்தையுடன் அவர் தப்பினார்.

உடனடியாக போலீசார்,அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது தனது கணவரை போலீசார் அடித்து கொடுமைப்படுத்துவதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.